அதானி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறீர்களா? - ராகுல் காந்தி கிண்டல்


புதுடெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள மாட்டார் என்பது வெளிப்படையானது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

சூரிய மின்சக்தி திட்டத்துக்காக 2,100 கோடி ரூபாய் வரை இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையே இல்லை என்று கூறியுள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டமான FCPA விதியை அதானி குழுமம் மீறவில்லை என்றும் கூறியுள்ளது. அமெரிக்காவில் பதிவானபுகார்களில் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தொழிலதிபர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதானிகள் குற்றச்சாட்டுகளை ஏற்கப் போகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள்? வெளிப்படையாக, அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கப் போகிறார் என்பது தெரியும்தானே.

அவரைக் கைது செய்ய வேண்டியதுதான் விஷயம். நாங்கள் சொன்னது போல், நூற்றுக்கணக்கான மக்கள் சிறிய குற்றங்களில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அதானியை அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் சிறையில் இருக்க வேண்டும். அரசாங்கம் அவரைப் பாதுகாக்கிறது" என்று கூறினார்.

x