அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம்: நினைவு நாணயம் வெளியிட்டார் குடியரசுத் தலைவர் முர்மு


அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று நினைவு நாணயம், தபால் தலை வெளியிட்டார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை அவர் வெளியிட்டார். மேலும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 2 நூல்களையும் அவர் வெளியிட்டார். இதையடுத்து கூட்டத்தினர் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது அரசியலமைப்பு சட்டம் உயிரோட்டம் கொண்ட மற்றும் முற்போக்கான ஆவணம். அதன் மூலம் சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய இலக்குகளை நாம் அடைந்துள்ளோம்.

இந்தியர்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசியலமைப்பு சட்ட லட்சியங்களை உள்வாங்கி, தங்களின் அடிப்படை கடமைகளை செய்ய வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைவதற்காக உழைக்க வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது. இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வாழ்த்துகள். 75 ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில், நமது அரசியலமைப்பு சட்டமாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தலைமையில், முழு நாடும் ஒன்றிணைந்து அரசியல் சாசனத்திற்கு நன்றி தெரிவிக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டம் நமது மக்களின் பல வருட தவம், தியாகம், அறிவாற்றல், வலிமை, திறன் ஆகியவற்றின் விளைவாகும். இந்த மைய மண்டபத்தில், சுமார் 3 வருட கடின உழைப்பிற்கு பிறகு, நாட்டின் புவியியல் மற்றும் சமூக வேறுபாடுகளை ஒரே இழையில் இணைக்கும் அரசியலமைப்பை உருவாக்கினர்” என்றார். நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

x