புதுடெல்லி: பான் அட்டை 2.0 திட்டத்தை ரூ.1,435 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: பான் அட்டையை, வர்த்தகத் துக்கான பொது அடையாள அட்டையாகவும், உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றைஆதாரமாகவும் மாற்ற பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் பான் அட்டை, தகவல்களை அளிக்கும் வலுவான ஆதாரமாக இருக்கும். இது ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் தற்போது பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேர், தங்கள் பான் அட்டைகளை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் பான் எண் மாறாது.பான் அட்டை, க்யூ ஆர் கோடுமற்றும் தரவு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். பான் 2.0 திட்டத்தில் ‘கட்டாய பான் தரவு பெட்டக அமைப்புடன்’ ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும். இந்த வசதியை, பான் தரவைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தரவு பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதில் உள்ள முக்கியமான அம்சம் பான் தரவு பெட்டக அமைப்பு. பான் எண் தொடர்பான தகவல்களை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பான் எண் தகவல்களை நாங்கள் பல இடங்களுக்கு வழங்குகிறோம். அந்த நிறுவனங்கள் பான் தரவு பெட்டக அமைப்பின் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.