திருப்பதி: கோயில் நகரமான திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் நேற்று 17 வயதான ராயல் பெங்கால் புலி உயிரிழந்தது.
இதுகுறித்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிருகக்காட்சி சாலையின் கண்காணிப்பாளர் சி.செல்வம் கூறுகையில், “மது என்ற புலி 2018ல் பெங்களூருவில் உள்ள பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து இந்த உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. புலி ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக எங்களின் பராமரிப்பில் இருந்தது. ஆனால், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இது காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் இல்லை.
கடந்த இரண்டு மாதங்களாக புலி உணவு மற்றும் தண்ணீரை எடுக்கவில்லை. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோயியல் நிபுணர்கள் குழு புலியை பிரேதப் பரிசோதனை செய்தது. முதுமை மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் புலி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் இந்த ஆண்டில் உயிரிழந்த மூன்றாவது புலி இதுவாகும். அவற்றில் இரண்டு ராயல் பெங்கால் புலிகள். ஜூலை மாதம், ஜூலி என்ற ஐந்து வயது புலி, நோய்வாய்ப்பட்டு இறந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் உள்ள நவாப் வாஜித் அலி ஷா உயிரியல் பூங்காவில் இருந்து இங்கே கொண்டு வரப்பட்டது.
அதேபோல மார்ச் மாதம், ஏழு வயது ஆண் வங்கப் புலி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இறந்தது. மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்தில் 2016 ஆம் ஆண்டு பார்வையற்ற நிலையில் இந்த புலி பிறந்தது. இது 2017 இல் இருந்து வலிப்பு, நரம்புக் கோளாறு ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 5,532 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும்.
மிருகக்காட்சிசாலையின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இங்கே 31 வகையான பாலூட்டிகள், 46 வகையான பறவைகள் மற்றும் 7 வகையான ஊர்வனவற்றைக் கொண்டுள்ளது.