மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? - அஜித் பவார் எடுக்கப்போகும் முடிவு என்ன?


மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி அமோக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வராக பதவியேற்பது யார் என்ற சஸ்பென்ஸ் 3வது நாளாக நீடிக்கிறது. தேவேந்திர பட்னாவிஸா அல்லது ஏக்நாத் ஷிண்டேவா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் முக்கிய துருப்பு சீட்டாக அஜித் பவார் மாறியுள்ளார்.

மாநிலத்தின் 14வது சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியின் யார் அடுத்த முதல்வர் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

பாஜக தலைவர்கள் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே நேரத்தில் சிவசேனா எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

யாருக்கு பெரிய பதவி கிடைக்கும் என்று பாஜக தலைமை யோசித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், முதல்வரின் அதிகாரபூர்வ பங்களாவான வர்ஷாவுக்கு வெளியே சிவசேனா தலைவர்கள் குழு ஒன்று கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் ஷிண்டே தலையிட்டு, வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவர் "மகாயுதி கூட்டணியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மாநிலத்தில் எங்கள் ஆட்சி மீண்டும் அமையும். மகா கூட்டணியாக, நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டோம், இன்றும் ஒன்றாக இருக்கிறோம். என் மீதுள்ள அன்பினால், அனைவரும் ஒன்று கூடி மும்பைக்கு வருமாறு சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உங்கள் அன்புக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அப்படி யாரும் எனக்கு ஆதரவாக வரக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த சஸ்பென்ஸுக்கு மத்தியில், சிவசேனா செய்தித் தொடர்பாளர் நரேஷ் மஸ்கே, 'பீகார் மாதிரி'யை மேற்கோள் காட்டி, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். "பீகாரில் பாஜக, எண்ணிக்கையைப் பார்க்காமல், ஜேடி(யு) தலைவர் நிதிஷ்குமாரை முதல்வராக்கியது போல், ஷிண்டேவை முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். மகாராஷ்டிராவில் உள்ள மகாயுதியின் மூத்த தலைவர்கள் இறுதியில் முடிவெடுப்பார்கள்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், தேவேந்திர பட்னாவிஸுக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர் என்று பாஜகவின் பிரவின் தரேகர் கூறினார். "மகாராஷ்டிர மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நின்றனர். எனது கருத்துப்படி பட்னாவிஸ் முதல்வராக வேண்டும். மகாராஷ்டிராவிற்கு ஒரு புத்திசாலித்தனமான மற்றும் கல்வியாளர் தலைவர் தேவை. அவர் கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருந்தார்" என்று கூறினார்.

பாஜகவுக்கு 132 எம்எல்ஏக்களும், சிவசேனாவுக்கு 57 எம்எல்ஏக்களும், என்சிபிக்கு 41 எம்எல்ஏக்களும் உள்ளனர். எனவே 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 145 என்ற பெரும்பன்மைக்கான மேஜிக் எண்ணிக்கையை எட்டுவதற்கு பாஜகவுக்கு, தனது இரண்டு கூட்டணிக் கட்சிகளில் ஒன்று மட்டுமே தேவை. இது முதல்வர் பதவிக்கு ஏக்நாத் ஷிண்டே பேரம் பேசும் சக்தியை குறைத்துள்ளது. இந்த சூழலில் அஜித் பவார் தலைமையிலான என்சிபி, பட்னாவிஸுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பவார், பட்னாவிஸுக்கு ஆதரவளித்தால் ஷிண்டேவின் தயவு இல்லாமலே, அவரால் முதல்வராக முடியும். எனவே இப்போது மகாராஷ்டிர அரசியலின் முக்கிய துருப்பு சீட்டாக மாறியுள்ளார்.

x