கடந்த 10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு: வெளியான ஷாக் தகவல்


புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 853 இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 383 ஐஆர்எஸ் (வருமான வரி) அதிகாரிகள் மற்றும் 470 ஐஆர்எஸ் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகள் 2014-2024 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு (VRS) பெற்றுள்ளனர் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மேலும், ஒரு தனி பதிலில், நிதி ஆண்டு 20 முதல் நிதியாண்டு 25 வரை (அக்டோபர் 31, 2024 வரை) கேரளாவில் உள்ள விமான நிலையங்களில் 2,746.49 கிலோ தங்கம் சுங்கத் துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஐந்து நிதியாண்டுகளிலும், நடப்பு நிதியாண்டிலும் (அக்டோபர் 31, 2024 வரை), 112.62 கிலோ சர்வதேச தங்கம் கேரள காவல்துறையால் கைப்பற்றப்பட்டு, சுங்கத் துறையின் விதிகளின் கீழ் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தொகை தொடர்பான நிதி மோசடிகள் மற்றும் நிகழ்ந்த தேதியின் அடிப்படையில், வணிக வங்கிகள் மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களில் மோசடி வழக்குகளில் ஈடுபட்ட தொகை 2021-22 இல் ரூ.9,298 கோடியிலிருந்து 2022-23ல் 3,607 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2023-24ல் ரூ.2,715 கோடியாக இருக்கும் என்று அவர் பதிலளித்தார்.

x