முதல் நாளிலேயே அனல் பறந்த அதானி விவகாரம்: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா இதனை ஏற்க மறுத்தார். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

மாநிலங்களவையில் அதானி விவகாரம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு ஏற்கனவே தான் எழுதிய கடிததத்தைச் சுட்டிக்காட்டி மாலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார். அப்போது, நீங்கள் பேசும் விவகாரம் பதிவு செய்யப்பட மாட்டாது என்றும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஜக்தீப் தன்கர் கூறினார். இதனால் எழுந்த அமளி காரணமாக மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிய காங்கிரஸ் எம்பி கே.சி வேணுகோபால், "அதானி விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவில் நடந்த இந்த சம்பவம் (4 மாநில அரசுகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு) தொடர்பாக அமெரிக்க அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை அமெரிக்கா மிகக் கடுமையாக எடுத்துள்ளதால், அதானி நிறுவனத்துக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். எனவே இந்தப் பிரச்சினையை விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றமே" என தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “நாடாளுமன்றம் செயல்பட அரசாங்கம் அனுமதிக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மல்லிகார்ஜுன் கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, "உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதே அரசாங்கம் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை. கோடிக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த முதலீடுகள் ஆபத்தில் உள்ளன. எனவே, இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையே இண்டியா கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன.

இந்த நாட்டை ஏகபோகமாக நடத்த அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தொழில்முனைவோர்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். சம வாய்ப்புகள், செல்வத்தின் சமமான பகிர்வு ஆகியவை கொண்டதாக தனியார் துறை விளங்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சந்தை உந்துதல் போட்டியே நாட்டுக்குத் தேவை" என குறிப்பிட்டுள்ளார்.

x