மும்பை: மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனா மூத்த தலைவருமான தீபக் கேசர்கர், சட்டமன்றத் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே தொடர வேண்டும் என்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கருதுவதாகக் கூறினார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்து, எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதிக்கு வெறும் 49 இடங்களை மட்டுமே பெற்றது. இதனையடுத்து நேற்று மும்பையில் தீபக் கேசர்கர் ஏக்நாத்ஷிண்டேவைச் சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேசர்கர்,"சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே பதவியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஏனெனில் அவரது தலைமையில் மகாயுதி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. தேர்தல்களில் சிறப்பான வெற்றியை பெற்றது" என்று கேசர்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், முதல்வர் விவகாரத்தில் எக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் (பாஜக), அஜித் பவார் (என்சிபி) ஆகியோர் ஒருமனதாக முடிவெடுப்பார்கள் என்று அவர் கூறினார். சாவந்த்வாடி தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றி பெற்ற கேசர்கர் கூறுகையில், “எந்த முடிவாக இருந்தாலும் அது மகாராஷ்டிராவின் நலனுக்காகவே இருக்கும்” என்றார்.
மகாராஷ்டிரா தேர்தலில் பட்னாவிஸ் தலைமையிலான பாஜக 288 இடங்களில் அதிகபட்சமாக 132 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவி குறித்த ஊகங்கள் பரவத் தொடங்கின. ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித்பவாரின் என்சிபி 41 இடங்களையும் கைப்பற்றியது.
இருப்பினும், முதல்வர் பதவியில் எந்த சர்ச்சையும் இல்லை என்று பட்னாவிஸ் மறுத்தார், மகாயுதியின் தலைவர்கள் இந்த பிரச்சினையில் ஒன்றாக முடிவெடுப்பார்கள் என்று கூறினார். மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, “மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை ஆளும் மகாயுதி கூட்டணியின் தலைவர்களும், பாஜக தலைமையும் முடிவு செய்யும்,” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, சிவசேனா சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை புறநகர் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் 57 பேரும் ஏகமனதாக நிறைவேற்றினர்.