வரலாறு காணாத படுதோல்வி: மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நானா படோல் ராஜினாமா


மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாதி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.103 இடங்களில் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதவி விலகியுள்ளார். இவர் சகோலி தொகுதியில் வெறும் 208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னாள் எம்.பி.யான நானா படோல், 2021ல் பாலாசாஹேப் தோரத்துக்குப் பதிலாக மகாராஷ்டிர காங்கிரஸின் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்றது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 17 இடங்களில் காங்கிரஸ் 13ல் வெற்றி பெற்றது. அனைத்து மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகளும் மகாராஷ்டிராவில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தன.

இதனையடுத்து படோல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சீட் பகிர்வு பேச்சுவார்த்தையின் போது கடுமையாக பேரம் பேசியது. இதனால் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபி (சரத் பவார்) இடையே உரசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், படோல் சம்பந்தப்பட்டிருந்தால், சீட்-பகிர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்கமாட்டோம் என தாக்கரே அணி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் மகா விகாஸ் அகாதி அரசாங்கம் காங்கிரஸ் தலைமையில் அமையும் என்று படோல் கூறியதை அடுத்து, நாங்கள் அதை ஏற்க மாட்டோம் என்று சிவசேனா தாக்கரே அணியின் தலைவர் சஞ்சய் ராவத் கோபமடைந்தார்.

தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றதால், மகா விகாஸ் அகாதி 50 தொகுதிகளை மட்டுமே வென்றது. மேலும், மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் அதன் மோசமான தோல்வியை பதிவுசெய்தது, கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் இந்த முறை 16 தொகுதிகளில் மட்டுமே வென்றது. முன்னதாக, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் "எதிர்பாராதது" மற்றும் "விளக்க முடியாதவை" என்று காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி கூறியது. இதிபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “கட்சியின் செயல்பாடு மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணிகளை கட்சி ஆய்வு செய்வோம்” என்றார்.

x