மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி கருத்து


மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று முடிவுகள் வெளியான நிலையில் ஜார்க்கண்டில் ஜேஎம்எம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் அமரவுள்ளார். அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதேநேரத்தில் இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கிய ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நீர், வனம், நிலம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காக வந்த வெற்றி இது.

அதேபோல் கேரள மாநிலம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா காந்தி, தனது அர்ப்பணிப்புடன் வயநாடு தொகுதியை முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக மாற்றுவார். பிரியங்கா காந்தி மீது நம்பிக்கை வைத்த வயநாட்டு மக்களை நினைத்து பெருமை கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

x