உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத்தேர்தலில் 6 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 2 இடங்கள் சமாஜ்வாதி கட்சிக்கும், ஓர் இடம் ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சிக்கும் கிடைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மீராப்பூர், குண்டர்க்கி, காஸியாபாத், காயிர், கர்ஹால், சிஷாமாவ், புல்பூர், கதேஹரி, மஜ்ஹவான் ஆகிய 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 9 தொகுதிகளின் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முடிவுகள் வெளியான நிலையில் இதில் காஸியாபாத், குண்டர்க்கி, காயிர், புல்பூர், கதேஹரி, மஜ்ஹவான் தொகுதிகளில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
கர்ஹால், சிஷாமாவ் தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும் மீராப்பூர் தொகுதியை ராஷ்டிரிய லோக் கள கட்சி கைப்பற்றியுள்ளது. கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவின் நம்பிக்கைக்குரிய யாதவ் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீராப்பூர் தொகுதியில் ராஷ்டிரிய லோக் தள கட்சி வேட்பாளர் மித்லேஷ் பால் அபார வெற்றியை வசமாக்கியுள்ளார்.
குண்டர்க்கியில் பாஜக வேட்பாளர் ராம்வீர் சிங் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார். காஸியாபாத்தில் பாஜக வேட்பாளர் அதுல் கர்க்கும், காயிர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேந்தர் திலேரும், புல்பூர் தொகுதியில் பாஜகவின் தீபக் படேலும், கதேஹரி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷோபாவதி வர்மாவும், மஜ்ஹவானில் சுச்சிஸ்மிதா மவுர்யாவும் வெற்றி பெற்றுள்ளனர். சிஷாமாவ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நசீம் சோலங்கி வெற்றி கண்டார்.
தற்போது வெற்றி பெற்றுள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளை 2022-ல் பாஜக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் 3 தொகுதிகளை கூடுதலாகக் கைப்பற்றியுள்ளது பாஜக. இதனால் பேரவையில் பாஜகவின் பலம் மேலும் கூடியுள்ளது