மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது என்று சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தோல்வி கண்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் எப்படி சூழ்நிலை மாறியது என்று தெரியவில்லை. இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. மகாயுதி கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது வெற்றி சுனாமி அலை போன்று உள்ளது.
2020-ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின்போது ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை மகாராஷ்டிர மாநில மக்கள் கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது. இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.