மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸா அல்லது ஏக்நாத் ஷிண்டே என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இப்போது பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிராக பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போது ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பிறகு யார் முதல்வராகப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “ அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஏற்கனவே ஒரு முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி தலைவர்கள், அனைவரின் ஆலோசனைக்கு பிறகே முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் யார் என்பதில் எந்த சர்ச்சையும் இருக்காது. தேர்தலுக்குப் பிறகு, மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து இதை முடிவு செய்வது என்று முதல் நாளிலேயே முடிவு செய்யப்பட்டது. முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை" என்று அவர் கூறினார்
தற்போதைய தேர்தல் ஆணைய தரவுகளின்படி மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 230-ல் மகாயுதி கூட்டணியும், 54-ல் மகாவிகாஸ் அகாதி கூட்டணியும், 5 தொகுதிகளில் இதர கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன.
இதில் பாஜக 132 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) 54 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 40 இடங்களிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 20 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியை சேர்ந்தவரே முதல்வராவார் என்று கூறப்படுகிறது.