மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளதாக சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போதைய நிலவரப்படி 288 தொகுதிகளில் 229-ல் மகாயுதி கூட்டணியும், 54-ல் மகாவிகாஸ் அகாதி கூட்டணியும், 5 தொகுதிகளில் இதர கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன.
இதில் பாஜக 120 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 39 இடங்களிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 19 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு பெரிய வெற்றியை பெற்றுள்ள சூழலில், "இதில் ஒரு பெரிய சதி இருப்பதை நான் காண்கிறேன்" என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அவர், “இதை நாங்கள் மக்கள் ஆணையாக ஏற்கவில்லை. இந்த ஆணையை எப்படி ஏற்றுக்கொள்வது என்று மக்கள் கூட யோசித்துக்கொண்டிருக்க வேண்டும். தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எப்படி வெற்றி பெற முடியும்? மகாராஷ்டிராவைக் கோபப்படுத்திய துரோகத்தால் அஜித் பவார் எப்படி வெற்றி பெறுவார்?.
ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பரிவர்த்தனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. தனது சிட்டிங் எம்.எல்.ஏக்கள் யாரேனும் தோற்றால் ராஜினாமா செய்வேன் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வந்தார். இது எந்த தேர்தலிலும் நடக்குமா? இது என்ன நம்பிக்கை, இது என்ன ஜனநாயகம்?. 200 இடங்களை விட அதிக இடங்கள் எப்படி கிடைக்கும். மாநிலத்தின் வாக்காளர்கள் நேர்மையற்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்களா?
இந்த முடிவை எங்கள் கட்சி ஏற்காது. மக்கள் கூட இந்த முடிவுகளை ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இது மக்களின் தீர்ப்பாக இருக்க முடியாது என்று நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவுக்கு அணிக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இது எப்படி சாத்தியம். மகாராஷ்டிராவில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.