மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? - ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பதில்


மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மஹாயுதி கூட்டணி மிகப்பெரிய முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.

தேர்தலில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலமைச்சர் யார் என அறிவிப்பார்கள் என்ற பாஜகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, "இறுதி முடிவுகள் முழுமையாக வரட்டும். நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டது போல், மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதல்வர் யார் என முடிவு செய்வோம்” என்று கூறினார்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு இன்றைய தினம் பெரிய எழுச்சியை கொடுத்துள்ளது. சிவசேனாவை பிளவுபடுத்தி, பாஜகவுடன் கைகோத்து முதல்வராக ஆன மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது முன்னாள் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவுக்கு எதிராக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். தற்போதைய தேர்தல் முடிவுகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் ஷிண்டேவின் சிவசேனா 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆனால், இப்போது முதல்வர் பதவியை ஷிண்டே தக்கவைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவரது கூட்டணி கட்சியான பாஜக போட்டியிட்ட 148 இடங்களில் 127 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, மேலும் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதல் பதவிக்கு வருவார் என்ற பேச்சு உறுதியாகியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே 56 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளதால் அவருக்கு பாஜக முதல்வர் பதவியை வழங்காது என்று சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மகாயுதி கூட்டணி 225 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி 55 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

x