மும்பை: மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 225 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இண்டியா கூட்டணி வெறும் 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தற்போதைய தேர்தல் ஆணைய தரவுகளின்படி மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 217-ல் மகாயுதி கூட்டணியும், 51-ல் மகாவிகாஸ் அகாதி கூட்டணியும், 19 தொகுதிகளில் இதர கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன.
இதில் பாஜக 124 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 37 இடங்களிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 18 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 14 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
220 தொகுதிகளுக்கும் மேல் மகாயுதி கூட்டணி முன்னிலை வகிப்பதால், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சியமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மகா விகாஸ் அகாதி கூட்டணி 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.