சத்தீஸ்கர் மாநில என்கவுன்ட்டரில் 10 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு


கோப்புப்படம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்டுகள் 10 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை முற்றிலும் ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் போலீஸார், பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பஸ்தார் மண்டலம் சுக்மா மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சிஆர்பிஎப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் விரைந்து சென்றனர்.

கிராமங்கள், மலைப் பகுதிகள். கோராஜுகுடா வனப்பகுதி, தன்டேஸ்புரம், நாகாரம், பந்தர்பதார் போன்ற பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் இடையில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே47 உட்பட ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன.

கடந்த வாரம் இதேபோல் அபுஜ்மார் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 5 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து 2024-ம் ஆண்டில் இதுவரை 207 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

x