புதுடெல்லி: ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓலா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
அண்மைக் காலமாக ஓலா மின் ஸ்கூட்டர்களில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், விற்பனைக்கு பிறகு சேவையில் குறைபாடு இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் எழுந்து வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக மின் ஸ்கூட்டர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டு ஓலா நிறுவனத்தின் வருவாய் குறைந்து லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, செப்டம்பர் காலாண்டு முதற்கொண்டு பணிநீக்க நடவடிக்கைகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. தேவைக்கும் அதிகமாக உள்ள பணியாளர்களை கண்டறிந்து நீக்கும் பணியில் ஜூலை முதல் ஓலா ஈடுபட்டு வருகிறது. சுமார் 500 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ள ஓலா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை இம்மாத்துடன் முடிவடையும். இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓலா எலக்ட்ரிக் தயாரிக்கும் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் சேவையில் குறைபாடு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் மத்திய நுகர்வோர் ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது.
கடந்த மாதம் சிசிபிஏ-விடம் இருந்து 10,644 புகார்களை பெற்றதாகவும், அதில் 99.1 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் ஓலா நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.