பெங்களூரு: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் மற்றும் கர்நாடக இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான முருதேஸ்வராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும். நான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன், இதை ஊடகங்கள் காட்ட வேண்டும். கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறப்போகிறது.
நான் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரச்சாரம் செய்துள்ளேன். அங்கு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்த வித்தியாசத்தில் ஆட்சி அமைப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அவர் அனைத்து தலைவர்களிடமும் பேசியிருக்கிறார். நானும் மகாராஷ்டிராவிற்கு சென்றிருக்கிறேன். கட்சிக்கு எல்லாம் சுமூகமாகவும் நன்றாகவும் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. எனினும், வாக்குப்பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது” என்று கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முடிவுகள் குறித்து கேட்டபோது, "ஜார்க்கண்ட் மாநிலத்தின் முடிவுகள் பற்றி எனக்குத் தெரியாது" என்று கூறினார். மேலும், கர்நாடகா மாநிலத்தின் சன்னபட்னா சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் எங்கள் கடமையைச் செய்துள்ளோம். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.