அதிகரிக்கும் நஷ்டம்: 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது ஓலா நிறுவனம்!


புதுடெல்லி: அரசாங்க விசாரணை மற்றும் பெருகிவரும் நஷ்டங்களால் நெருக்கடியில் சிக்கியுள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.

முந்தைய காலாண்டில் (Q1 FY25) ரூ. 347 கோடியாக இருந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 43 சதவீதம் அதிகரித்து ஜூலை-செப்டம்பர் காலத்தில் (Q2 FY25) ரூ.495 கோடியாகப் பதிவாகியுள்ளது. மேலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,644 கோடியிலிருந்து 26.1 சதவீதம் சரிந்து இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,214 கோடியாக குறைந்துள்ளது.

நிறுவனத்தின் சந்தைப் பங்கு இந்த காலாண்டில் 33 சதவீதமாக சரிந்தது. இது முந்தைய காலாண்டில் 49 சதவீதமாக இருந்தது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால், ஓரிரு மாதங்களில், முதலீட்டாளர்களின் மதிப்பு ரூ. 38,000 கோடிக்கு மேல் தேங்கியுள்ளது.

வெள்ளியன்று, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ. 67 ஆக இருந்தது. இது அதன் சந்தை அறிமுக விலையான ரூ. 76ஐ விட மிகக்குறைவு ஆகும். மேலும், ஓலாவின் மிக உயர்வான பங்கு விலையான ரூ. 157.40 இலிருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்தது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தை மூலதனம் இதுவரை இல்லாத அளவு ரூ. 31,000 கோடியாகக் குறைந்துள்ளது. இது முன்பு 69,000 கோடியாக இருந்தது. பல ஓலா எலக்ட்ரிக் வாடிக்கையாளர்கள் அதன் மென்பொருள், பேட்டரி மற்றும் நெரிசலான டயர்கள் குறித்து புகாரளித்துள்ளனர். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா மின்சார வாகனம் (EV) நிறுவனம், பணிநீக்கங்கள் குறித்து உடனடியாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், பணிநீக்கங்களைக் குறைத்து இயக்க லாபம் மூலம் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க முயற்சிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

x