வலுக்கும் அதானி விவகாரம் முதல் ராமேசுவரத்தில் மேகவெடிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


அதானி மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக உள்ள கவுதம் அதானி, அவரது மருமகனும், கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாகர் மற்றும் அஸுர் பவர் குளோபல் நிறுனத்தின் நிர்வாகி சிரில் கபேன்ஸ் ஆகியோர் மீது லஞ்சம் வழங்குதல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இந்திய அதிகாரிகளுக்கு 265 பில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க திட்டம் தீட்டியதாகவும், அமெரிக்காவில் நிதி திரட்டுவதற்காக அதனை மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றை அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், வழக்கறிஞர்கள் அலுவலகம் பதிவு செய்துள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

அதானி குழுமம் மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்தக் குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். ‘குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என்று அமெரிக்க நீதித் துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும்.

அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானியை கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்: லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியத் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்த நாட்டில் பல முதல்வர்கள் எளிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால், ரூ.2,000 கோடி ஊழல் செய்தவருக்கு பிரச்சினையே இல்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். மோடி - அதானி ஊழலில் கூட்டு என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘சட்டம் தனது கடமையைச் செய்யும்’ - பாஜக: அதானி விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான செய்தி இன்று காலை முதல் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களும் எதிர் குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டிருக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்" என தெரிவித்தார்.

அதானி விவகாரத்தில் தமிழக அரசுக்கு தொடர்பா? - ‘அதானி நிறுவனத்தின் லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, லஞ்சம் வழங்குதல் தொடர்பான அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில்தான், அதாவது 2021-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘அதானி நிறுவனத்துடன் தொடர்பு இல்லை’ - செந்தில் பாலாஜி: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், “அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு என ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு: ஐகோர்ட் உத்தரவு: ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி - வலுக்கும் எதிர்ப்பு: கடை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மீண்டும் ரூ.57,000-ஐ தாண்டிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மீண்டும் ரூ.57,000-ஐ தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கு விற்பனையானது.

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்: கடந்த 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக அந்நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது. ஆனால், எந்தவிதமான விதமான ஆயுதங்கள் இருந்தன என்பதைப் பற்றி குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ரஷ்யாவின் அஷ்ட்ராகன் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது என்று உக்ரைன் விமானப் படை டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளது.

ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் அதிகப்பட்சமாக 43.8 செ.மீ மழை பதிவானது.

இதனால் ராமேசுவரத்தில் உள்ள காந்திநகர், அண்ணா நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், மீனவர் குடியிருப்புகளான ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, தங்கச்சிமடம் விக்டோரியா நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பாம்பன் முந்தல்முனை, தோப்புக்காடு, மண்டபம் கலைஞர் பகுதிகளிலும் மழைநீர் மீனவர்களின் குடிசைகளுக்குள் புகுந்தது. மழையினால் பாதிக்கப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் பாம்பனில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, தமிழகத்தில் நவ.25-ம் தேதி முதல் நவ.27 வரையிலான மூன்று நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு சென்னை மையம் எச்சரித்துள்ளது.

இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்: “தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும். ஓசூர் நீதிமன்றம் சம்பவம், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. தூத்துக்குடி சம்பவத்தில் நடந்த உயிரிழப்புதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை.” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்

x