அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கோயில் இடிப்பு - பள்ளி கட்டுவதற்காக கர்நாடக அரசு அதிரடி


பெங்களூரு: ராய்ச்சூர் மாவட்டத்தில் அரசு இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கோயில் இடிக்கப்பட்டது. சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் இருந்த இந்தக் கோயில், அரசுப் பள்ளி கட்டுவதற்கு வசதியாக இடிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் எல்.பி.எஸ். நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்கு ஜூன் 1, 2022 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும், அந்த இடத்தில் மக்கள் சட்டவிரோதமாக கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். எனவே அப்பகுதி மக்கள் கோயிலை இடித்து பள்ளி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளியின் கட்டுமானப்பணிகள் தாமதமானது.

அரசு அதிகாரிகளின் தலையீட்டால், கோயிலாக வழிபடப்பட்ட இடத்தை கட்டுமானப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கொட்டகையாக உள்ளூர் நிர்வாகம் பயன்படுத்தியது. ஆனாலும், உள்ளூர்வாசிகளால் மீண்டும் அந்த இடம் ஒரு தற்காலிக கோயிலாக மாற்றப்பட்டது. இதனால் குடியிருப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்போக்கு உருவானது.

இந்த நிலையில், ராய்ச்சூர் உதவி ஆணையர் கஜானன் பாலே தலைமையில் நகர முனிசிபல் கவுன்சில் (சிஎம்சி) ஆதரவுடன் ஜேசிபி இயந்திரம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோயில் இடிக்கப்பட்டது.

இதுபற்றி பேசிய துணை கமிஷனர் கே.நிதீஷ், “ எல்பிஎஸ் நகரில் உள்ள இந்த இடம் அரசுப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பள்ளி கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரம்பத்தில் கட்டுமானப் பொருட்களுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை, சிலைகள் கொண்ட கோயிலாக மாற்றப்பட்டது. இதனால் பள்ளி கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து ராய்ச்சூர் சிஎம்சி கமிஷனர் குருசித்தய்யா, கூடுதல் எஸ்பிக்கள் சிவக்குமார், ஹரீஷ், 3 டிவைஎஸ்பிக்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூர்வாசிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பள்ளிக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா பிராந்திய மேம்பாட்டு வாரியத்தின் (கேகேஆர்டிபி) மானியம் கட்டுமானப் பணிகளைத் தொடங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயிலை அகற்றிய நிலையில், நான்கு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தின் பணிகள் விரைவில் தொடங்கும்” என்றார்

x