புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளதை கருத்தில் கொண்டு, அரசு அலுவலகங்களில் 50% பேர் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் கோபால் ராய், “காற்று மாசுபாட்டைக் குறைக்க, டெல்லி அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வார்கள்.இந்த விதிமுறையை அமல்படுத்துவது குறித்து இன்றைய தினம் அதிகாரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, டெல்லி அரசு தனது அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு மாற்றப்பட்ட அலுவலக நேரத்தை அறிவித்தது. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) அலுவலகங்களின் நேரம் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரையிலும், டெல்லி அரசு அலுவலகங்களின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்.சி.ஆர்) காற்றின் தரம் "கடுமையான பிளஸ்" நிலையில் உள்ளது, இது மக்களுக்கு உடல்நல பாதிப்புகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு 460 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு (AQI) பதிவு செய்யப்பட்டது. இது திங்களன்று பதிவு செய்யப்பட்ட 494 அளவை விடக் குறைவு. ஆனால் டெல்லியில் இன்னும் "கடுமையான-பிளஸ்" வகைப்பாட்டில் காற்று மாசுபாடு உள்ளது. 401 மற்றும் 450 க்கு இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு "கடுமையானது" என்றும், 451 மற்றும் 500 வரையிலான காற்றின் தரக் குறியீடு "கடுமையான-பிளஸ்" எனவும் வகைப்படுத்தப்படுகிறது.