காற்றில் உள்ள புகை மண்டலத்தை குறைக்க செயற்கை மழை: மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் கோபால் ராய் வலியுறுத்தல்


காற்றில் உள்ள புகை மண்டலத்தை குறைக்க செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்தலாம் என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று யோசனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வாகன இயக்கம், தொழில்துறை செயல்பாட்டில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் டெல்லி அரசு எடுத்துள்ளது. ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஒத்துழைப்பின்றி காணப்படுகிறது.

காற்றில் புகைப் படலத்தைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து நிபுணர்களிடம் நடத்திய ஆலோசனையில் செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது தெரியவந்தது. ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. செயற்கை மழைப்பொழிவில் பல்வேறு மத்திய துறைகளின் அனுமதியும் ஒத்துழைப்பும் தேவை. இந்த சூழ்நிலையில், அவசர கூட்டத்தை கூட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு மீண்டும் கடிதம் எழுத உள்ளேன். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். அவ்வாறு செயல்படுவது அவரின் தார்மீக கடமையாகும். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு தயாராக உள்ளது. இவ்வாறு கோபால் ராய் தெரிவித்தார்

x