டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க செயற்கை மழைக்கு அனுமதி வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லி அரசு கோரிக்கை


புதுடெல்லி: காற்றின் தரம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியதால், டெல்லியில் செயற்கை மழையை அனுமதிக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செயல்படவில்லை என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் குற்றம் சாட்டினார்.

டெல்லி காற்று மாசுபாடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கோபால் ராய், “டெல்லி GRAP (Graded Response Action Plan) நிலை IV கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளது, மேலும் வாகன மற்றும் தொழில்துறை மாசுபாட்டைக் குறைக்க சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் எடுத்து வருகிறோம். நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், தனியார் வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசுபாட்டால் உருவான புகை மூட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக நாங்கள் நிபுணர்களை ஆலோசித்து வருகிறோம். பரிசீலனையில் உள்ள தீர்வுகளில் ஒன்று செயற்கை மழை. இது காற்றில் உள்ள மாசுகளை அழிக்க உதவும். நகரின் மாசுபாடு மற்றும் செயற்கை மழையை அனுமதிப்பது குறித்து அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு டெல்லி அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதிலளிக்கவில்லை

மக்கள் மூச்சுவிட சிரமப்படுகிறார்கள். இந்த அவசரநிலையைச் சமாளிக்க செயற்கை மழை குறித்து ஆகஸ்ட் 30 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு நாங்கள் எழுதிய முதல் கடிதத்திற்கு எந்த பதிலும் வராதது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் மீண்டும் அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 23 அன்று கடிதம் எழுதினோம், ஆனால் இன்னும் பதில் இல்லை. இப்போது மீண்டும் கடிதம் எழுதியுள்ளோம். இந்த விஷயத்தில் உடனடியாக தலையிடுமாறு நான் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் கோபால் ராய் கூறினார்.

மேக விதைப்பு என்பது வறட்சியின் தாக்கத்தைக் குறைத்தல், காட்டுத் தீயைத் தடுப்பது, மழைப்பொழிவை அதிகரிப்பது மற்றும் காற்றின் தரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக, மேகங்களில் சில ரசாயனங்களை தூவி செயற்கையாக மழையை பொழியவைக்கும் முறையாகும்.

மேக விதைப்பின் போது, ​​வெள்ளி, பொட்டாசியம் மற்றும் உலர் பனி போன்ற இரசாயனங்கள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வானத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த இரசாயனங்கள் நீராவியை ஈர்க்கின்றன, இதனால் மழை மேகங்கள் உருவாகின்றன. இந்த முறையில் மழை பெய்ய அரை மணி நேரம் ஆகும்.

டெல்லி அரசு இந்த செயல்முறையை முன்னரே ஆராய்ந்தது. இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் அனுமதி தேவை.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்.சி.ஆர்) காற்றின் தரம் " அதிக எச்சரிக்கை" அளவில் உள்ளது. இன்று காலை, ஏழாவது நாளாக டெல்லி நகரின் காற்றின் தரக்குறியீடு AQI 500 (கடுமையான பிளஸ்) அளவை தொட்டது. டெல்லியில் திங்கள்கிழமை காற்றின் தரக்குறியீடு 494 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரக்குறியீடு 441 ஆகவும், சனிக்கிழமை காற்றின் தரக்குறியீடு 417 ஆகவும் இருந்தது.

டெல்லி அரசாங்கம் தற்போதைய காற்று மாசுபாட்டை "மருத்துவ அவசரநிலை" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பொது சுகாதார நலன்களுக்காக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மோசமான காற்று மாசுபாடு காரணமாக, டெல்லி-என்சிஆரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளன.

x