ரூ.64 கோடி மின் பாக்கி: இமாச்சல் பவனை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு


சிம்லா: செலி ஹைட்ரோ மின் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி மின்சார பாக்கி தொகையை இமாச்சல பிரதேச மாநில அரசு செலுத்தத் தவறியதையடுத்து, டெல்லியில் உள்ள இமாச்சல பவனை ஜப்தி செய்ய இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள்கிழமை நடந்த விசாரணையின் போது, ​​இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, செலி ஹைட்ரோ மின் நிறுவனத்திற்கு 7 சதவீத வட்டியுடன் பாக்கியை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலுவைத் தொகையை செலுத்தாத அதிகாரிகளின் தலையீடு குறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி, அந்த நபரிடம் இருந்து தொகையை வசூலிக்குமாறு எரிசக்தித்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2009 ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் அப்போதைய அரசாங்கம் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைக்கப்படும் செலி ஹைட்ரோ நிறுவனத்திற்கு 320 மெகாவாட் மின் திட்டத்தை ஒதுக்கியது. எல்லைச் சாலைகள் அமைப்பினரும் திட்டத்திற்குத் தேவையான சாலைக் கட்டுமானத்திற்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டனர். ஒப்பந்தத்தின்படி, ஹைட்ரோ நிறுவனம் திட்டப்பணியை குறித்த நேரத்தில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இது நடக்கவில்லை.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, செலி ஹைட்ரோ நிறுவனம் 2017 இல் உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில், திட்டத்தை அமைப்பதற்கான வசதிகள் இல்லாததால், திட்டத்தை நிறுவனம் மூடிவிட்டு அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். .

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு ரூ.64 கோடி முன்கட்டண பிரீமியத்தை செலுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இமாச்சல் அரசு எல்பிஏ தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சிஆர் கேசவன், “ ராகுல் காந்தியின் பொருளாதார யோசனைகள் இமாச்சல பிரதேசத்தில் பேரழிவுகரமான விளைவை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, இமாச்சல் அரசாங்கத்தின் பொருளாதாரம் மிகவும் சிதைந்து, மின் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாத அளவுக்கு சிதைந்து கிடக்கிறது. இது இமாச்சல் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையையும் கவனக்குறைவான போக்கையும் காட்டுகிறது" என்று கூறினார்.

x