புது டெல்லி: காற்று மாசுபாடு கடும் தீவிரமடைந்துள்ளதால் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அனைத்து நேரடி வகுப்புகளையும் உடனடியாக நிறுத்த மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு தேசிய தலைநகரில் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் திட்டத்தின் (GRAP) கீழ், மாசு எதிர்ப்பு தடைகளை அமல்படுத்துவதில் தாமதம் செய்ததற்காக டெல்லி அரசு மற்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்தை (CAQM) உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
இன்று டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 486 ஆக உயர்ந்தது. இது இந்த பருவத்தின் மோசமான நிலையைக் குறிக்கிறது. மேலும், தொடர்ந்து இரண்டாவது நாளாக டெல்லியில் காற்றின் தரக்குறியீடு ‘கடுமையான பிளஸ்’ பிரிவில் உள்ளது.
இதனையடுத்து காற்று தர மேலாண்மை ஆணையம் இன்று முதல் GRAP இன் நிலை 4 ஐ செயல்படுத்தியுள்ளது. மேலும், டெல்லி அரசாங்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நிறுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவர், "10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் நுரையீரல் மற்ற மாணவர்களை விட வித்தியாசமாக இருக்க முடியாது. எனவே அவர்களுக்கான நேரடி வகுப்புகளையும் நிறுத்த ஒரு வழிகாட்டுதல் கொடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
இதனையடுத்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து நேரடி வகுப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.