‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படம் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து


புதுடெல்லி: 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், அயோத்தி சென்று திரும்பி கொண்டிருந்த 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற இந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டு, கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. பாலாஜி மோசன் பிக்சர்ஸ், விகிர் பிலிம்ஸ் புரொடக்சன், விபின் அக்னிஹோத்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளன. தீரஜ் சர்னா படத்தை இயக்கி உள்ளார்.

நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, நடிகை ராசி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். திரைப்படம் குறித்து மூத்த செய்தியாளர் அலோக் பட் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படம் அண்மைகால வரலாற்றின் முக்கிய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 59 அப்பாவி கரசேவகர்கள் தங்களுக்காக பேசும் வகையில் படம் அமைந்துள்ளது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படம் உள்ளது. உண்மை மட்டுமே எப்போதும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அலோக் பட்டின் பதிவை பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “நன்றாக எடுத்துரைத்து உள்ளீர்கள். 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மக்களுக்கு புரியும் வகையில் படம் உள்ளது. பொய், புனைக்கதை நீண்ட காலம் நிலைத்திருக்கிறது. உண்மைகள் வெளி வந்தே தீரும்" என்று தெரிவித்துள்ளார்.

x