திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தம்பி ராமமூர்த்தி (72). இவர் திருப்பதியை அடுத்துள்ள சொந்த ஊரான நாராவாரி பல்லியில் வசித்து வந்தார்.
இவருக்கு இந்திரா என்கிற மனைவியும் நாரா ரோஹித், நாரா கிரீஷ் என்கிற 2 மகன்களும் உள்ளனர். ராமமூர்த்தி கடந்த 1994 முதல் 1999 வரை சந்திரகிரி தொகுதி, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக இருந்தார். அப்போது தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். பிறகு மெல்ல அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த ராமமூர்த்திக்கு கடந்த வாரம் இதயத்தில்பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் காலமானார்.
மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட அரசியல், சினிமா துறை பிரமுகர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று உடல் தகனம் ராமமூர்த்தி நாயுடுவின் உடல் அவரது சொந்த கிராமத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் கலந்து கொள்கிறார். இதனால் நாராவாரி பல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.