சண்டிகர்: ஹரியானாவில் அண்மையில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் 1,500 கிலோ எடையுள்ள கொழு கொழு எருமை இடம்பெற்று அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. இதன் உரிமையாளர் கில். இந்த எருமைக்காக தினமும் ரூ.1,500-ஐ கில் செலவிடுகிறார். தினமும் 20 முட்டைகள், உலர் பழங்கள், 250 கிராம் பாதாம், 30 வாழைப் பழம், 4 கிலோ மாதுளை, 5 லிட்டர் பால் ஆகியவை இதன் உணவாக வழங்கப்படுகிறது.
இந்த எருமைக்கு அன்மோல் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே நடை பெறும் கால்நடைகள் கண்காட்சியில் அன்மோல் இடம்பெற்று வருகிறது. கொழு கொழுவெனவும், பளபளப்பாகவும் அன்மோல் காட்சியளிப்பதால் கால்நடை கண்காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது.
தினமும் 2 முறை இந்த எருமை குளிக்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அண்மையில் மீரட் நகரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் கண்காட்சியில் இடம்பெற்று அனைவரையும் கவர்ந்தது இந்த அன்மோல். தற்போது அன்மோலின் புகைப்படங்கள், செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரத்தில் 2 முறை அன்மோலிடமிருந்து உயிரணுக்கள் எடுக்கப்பட்டு இனப்பெருக்கத்துக்காக வழங்கப்படுகிறது. இந்த வகை எருமையிலிருந்து கிடைக்கும் உயிரணுக்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கில் தெரிவித்தார். இதற்காக மாதம்தோறும் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தனக்கு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போது இந்த வகை எருமையின் விலை ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை விற்கப் போவதில்லை என்றும், தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் நினைக்கிறேன் என்றும் பாசத்துடன் கூறுகிறார் கில்.