ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை: காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இன்று மகாராஷ்டிராவின் அமராவதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்

இது தொடர்பாக வெளியான வீடியோவில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை சோதனை செய்வதையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சோதனை தொடர்ந்ததால், ராகுல் காந்தி அங்கிருந்து வெளியேறி, கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் நேற்று காங்கிரஸ் கட்சி புகார் அளித்த நிலையில், அவரது ஹெலிகாப்டரின் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களுக்கு இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பி சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே முதலில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, அமித் ஷா, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் வீடியோக்களை பாஜக பகிர்ந்துள்ளது.

x