டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: ரயில், விமான சேவைகள் பாதிப்பு


புதுடெல்லி: தலைநகர் டெல்லி காற்று மாசால் திணறி வருகிறது. பலர் மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் நிலையில் காற்று மாசை வேகமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கட்டுமானம், வாகன பயன்பாடு என பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்றின் தரம் மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. காற்று மாசுபாட்டில் உலகஅளவில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று காலை நிவரப்படி அந்த நகரின் காற்றின் தரக் குறியீடு (ஏகியூஐ) 770-ஆக இருந்தது. இந்த நிலையில், ஏகியூஐ 498 தரக்குறியீட்டுடன் உலகளவில் அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, ஜஹாங்கிர் பூரி (458), பவானா (455), வஸிர்புர் (455), ரோஹிணி (452), பஞ்சாபி பாக் (443) ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளில் காற்றின் தரம் மிகமோசமான நிலையை எட்டியுள்ளது.

புகை மூட்டம் அதிகமாக காணப்படுவதால் பாதை தெளிவாக தெரியாத காரணத்தால் ரயில், விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. 25க்கும் மேற்பட்ட ரயில்கள் டெல்லிவந்தடைவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்பு டெல்லி முதல்வர் அதிஷிவெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிலைமை சீராகும் வரை டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அத்தியாவசிய மற்ற கட்டுமானம், கட்டிடங்களை இடிப்பது தடைசெய்யப் பட்டுள்ளது. மேலும், பிஎஸ்-3 பெட்ரோல், பிஎஸ்-4 டீசல் வாகனங்கள், டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. காற்று மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில், அதிலும் பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் முகக் கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

x