பாட்னா: பிஹார் மாநிலம் ஜமுய் மாவட் டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது ரூ.6,640 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் நகரில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமித தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, பிரத மரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாயமகா அபியான் (பிஎம்-ஜன்மான்) என்னும் திட்டத்தின் கீழ் பழங்குடியின குடும்பங்களுக் காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் கிரகபிரவேச நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். மேலும் பிஎம்-ஜன்மான் திட்டத்தின் கீழ் 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் (எம்எம்யு), தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக தார்தி அப்யா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (டாஜ்குவா) திட்டத்தின் கீழ் நடமாடும் 30 கூடுதல் மருத்துவப் பிரிவுகளையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 10 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும், 300 வளர்ச்சி மையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
விழாவில் பழங்குடியினர் பகுதிகளில் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள், 100 பல்நோக்கு மையங்கள் அமைக்கவும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் 25,000 புதிய வீடுகளுக்கும், டாஜ்குவா திட்டத்தின் கீழ் 1.16 லட்சம் வீடுகளுக்கும், பழங்குடியின மாணவர்களுக்கான 370 விடுதி களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘நாட்டின் சுதந்திரம் மற்றும் வரலாற்றில் பழங் குடி மக்களின் பங்களிப்பை யாராவது மறக்க முடியுமா? பழங்குடியினப் பெண்ணான திரவுபதி முர்முவை இந்திய குடியரசுத் தலைவராக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிர்ஷ்டம். பழங்குடியினர் நலம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை ஆகும். நாட்டில் பழங்குடியினர் நலனுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம்’’ என்றார்.