சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி கோரிக்கை


ஹைதராபாத்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினத்தில் நேற்று நடைபெற்ற குழந்தைகளுக்கான மாதிரி சட்டப் பேரவையில் மாணவர்களிடையே உரையாற்றிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை எவ்வாறு கேள்வி கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பது உட்பட சட்டமன்றத்தின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். இது போன்ற கூட்டங்கள் ஒரு செழிப்பான சமுதாயத்திற்கு அவசியம்" என்று அவர் கூறினார்.

மேலும், "அரசாங்கத்தை கேள்விக்குள்ளாக்குவதும், பொறுப்புக் கூறுவதும் எதிர்க்கட்சிகளின் பொறுப்பாகும். சட்டமன்ற அமர்வுகளை ஒழுங்காகவும் பயனுள்ளதாகவும் பேணுவதில் சபாநாயகரின் பங்கு முக்கியமானது. கடந்த கால தலைவர்களான ஜவஹர்லால் நேரு, கல்வி மற்றும் விவசாயத்தில் முன்னேற்றம் கண்டவர். வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்த ராஜீவ் காந்தி, ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்கேற்பை மேம்படுத்தினார்.

இந்த வரலாற்று மாற்றங்களின் அடுத்தகட்டமாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான வயது வரம்பை 25ல் இருந்து 21 ஆகக் குறைக்க வேண்டும். இது இளைஞர்கள் நிர்வாகத்தில் பங்கு வகிக்க உதவும்” என்றார்

x