யோகியின் தேர்தல் முழக்கம்: பாஜக கூட்டணியில் கடும் சலசலப்பு - மகாராஷ்டிராவில் பரபரப்பு


மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் “பிரிந்தால் இழப்பு” என்ற முழக்கம், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளிடம் சலசலப்பை உருவாக்கியது மட்டுமின்றி, பாஜக தலைவர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் "பாடேங்கே தோ கதேங்கே (பிரிந்தால் இழப்பு)" என்ற முழக்கத்துக்கு எதிராக, கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் ஏற்கனவே தனது கேள்வியை எழுப்பினார். இந்த சூழலில் பாஜக தலைவர்கள் பங்கஜா முண்டே மற்றும் அசோக் சவான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் வடக்கில் வேலை செய்யக்கூடும் என்றாலும், "துறவிகள் மற்றும் சிவனைப் பின்பற்றுபவர்களின் தேசமான" மகாராஷ்டிராவுக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளனர்.

மறைந்த பாஜக பிரமுகர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே பேசுகையில், “வெளிப்படையாகச் சொல்வதென்றால், எனது அரசியல் வேறு. ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் அதை ஆதரிக்கமாட்டேன். வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட வேண்டும் என்பது எனது நம்பிக்கை. இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரையும் நமக்குச் சொந்தமாக்குவதே தலைவரின் பணி. எனவே, மகாராஷ்டிராவில் இதுபோன்ற எந்த முழக்கத்தையும் நாம் கொண்டு வர வேண்டியதில்லை" என்று அவர் கூறினார்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அசோக் சவான், "இதற்கு முழக்கத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் நேரத்தில் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. குறிப்பிட்ட இந்த கோஷம் நல்ல ரசனையுடன் இல்லை, மக்கள் இதைப் பாராட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில், நான் அத்தகைய கோஷங்களுக்கு ஆதரவாக இல்லை" என்று கூறினார்.

இதுபற்றி அஜித் பவார் பேசுகையில், "நான் இதை ஆதரிக்கவில்லை. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். இது மகாராஷ்டிராவில் வேலை செய்யாது. இது உத்தரபிரதேசம், ஜார்கண்ட் அல்லது வேறு சில இடங்களில் வேலை செய்யலாம்" என்று கூறினார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவினர், வெளிப்படையாக இந்த விஷயத்தில் இன்னும் கருத்தை பதிவு செய்யவில்லை.

இதனையடுத்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்தார். அவர், “பங்கஜா முண்டே மற்றும் அசோக் சவான் ஆகியோர் இந்த முழக்கத்தின் "முக்கிய அர்த்தத்தை" புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர், இது உண்மையில் ஒற்றுமையின் செய்தியாகும். இந்த முழக்கம் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடியின் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கு எதிரானது. அஜித் பவார் பல தசாப்தங்களாக "மதச்சார்பற்ற மற்றும் இந்து-விரோத சித்தாந்தங்களுடன்" இருக்கிறார். அவர் இந்துத்துவாவை எதிர்ப்பது மதச்சார்பின்மை என்று சொல்பவர்களின் மனநிலையிலேயே தேங்கியிருக்கிறார். பொதுமக்களின் மனநிலையை அவர் புரிந்து கொள்ள சிறிது காலம் பிடிக்கும்" என்று கூறினார்.

இந்த சூழலில் யோகியால் கூட்டணி மற்றும் பாஜக கட்சிக்குள் வெடித்துள்ள இந்த சலசலப்பை, எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணி வாக்குகளாக மாற்ற முயற்சித்து வருகிறது.

x