ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தியோலி-உனியாரா சட்டப்பேரவை தொகுதியில் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மாவட்ட துணை ஆட்சியர் அமித் சவுத்ரி ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா, வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றுள்ளார். தேர்தல் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதால் சவுத்ரியின் கன்னத்தில் மீனா அறைந்துள்ளார்.
இந்நிலையில், நரேஷ் மீனாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைக் கண்டித்து மீனாவின் ஆதரவாளர்கள் சம்ரவதா கிராமத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட சுமார் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.