சத்ரபதி சம்பாஜிநகர்: மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்ரபதி சம்பாஜிநகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் கொண்டுவர காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன. காஷ்மீரில் மீண்டும் 370-வது சட்டப் பிரிவை கொண்டு வரகாங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
370-வது சட்டப்பிரிவில் இருந்து காஷ்மீரை நாங்கள் விடுவித்தபோது, நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் காங்கிரஸ் எதிர்த்தது. தற்போது அதை மீண்டும் கொண்டு வரவும், காஷ்மீரில் தனி அரசியல் சாசனம் உருவாக்கவும் அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு அம்பேத்கரின் அரசியல் சாசனம் இருக்க வேண்டும் என ஒவ்வொரு இந்தியரும் விரும்புகின்றனர்.
பாகிஸ்தான் மொழியில் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, மகாராஷ்டிர மக்கள் ஆதரவு அளிப்பார்களா? இடஒதுக்கீடு நாட்டுக்கு எதிரானது என கூறுவதை காங்கிரஸ் வழக்கமாக கொண்டுள்ளது. தகுதிக்கு எதிரானது இடஒதுக்கீடு என காங்கிரஸ் கருதுகிறது. காங்கிரஸின் மனநிலை மற்றும் கொள்கை மாறாமல் உள்ளது. அதனால் ஓபிசி பிரிவைச் சேர்ந்த பிரதமர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மகா விகாஸ் அகாடி சதி: இடஒதுக்கீடு முறையை காங்கிரஸ் ரத்து செய்யும் என வெளிநாட்டு பயணங்களில் ராகுல் காந்தி கூறுகிறார். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினரை பிரிக்க காங்கிரஸ் மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி சதி செய்கிறது. அவுரங்காபாத்தை, சத்ரபதி சம்பாஜிநகர் என பாஜக தலைமையிலான மகாயுதி அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என மகாராஷ்டிர மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை பாஜக நிறைவேற்றிவிட்டது. மகாயுதி அரசு அமைந்த பின் மகாராஷ்டிராவில் அந்நிய முதலீடு அதிகபட்சம் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டால் மகாராஷ்டிர மக்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.