ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானுக்கு ஜாமீன்: வக்ஃப் வாரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி 


புதுடெல்லி: வக்ஃப் வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானதுல்லா கானுக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

டெல்லி வக்ஃப் வாரிய பணமோசடி வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனத்துல்லா கானுக்கு டெல்லிரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், அமானதுல்லா கானுக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி வக்ஃப் வாரியம் தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும், முன்னாள் டெல்லி வக்ஃப் வாரியத் தலைவருமான அமானதுல்லா கான் மீது அமலாக்கத்துறை அக்டோபர் 29ஆம் தேதி துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால் அமானதுல்லா மீது வழக்குத் தொடர்வதற்கு முறையான ஒப்புதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால், அவரை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமானதுல்லா கானுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் ஒப்புக்கொண்டாலும், தேவையான ஒப்புதல்கள் இல்லாமல், விசாரணையைத் தொடர முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. தேவையான அனுமதி கிடைத்ததும், குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு தொடர்பாக அமனத்துல்லா கான் செப்டம்பர் 2 ஆம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஓக்லா பகுதியில் ரூ.36 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமானதுல்லா கான் வக்ஃப் வாரியத்தில் (2016-2021) பதவி வகித்த காலத்தில் ஊழல் நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட நிதியை மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

x