ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டதால், 20 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவபூர் மற்றும் ராமகுண்டம் இடையே சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12, 2024) நள்ளிரவு தடம் புரண்டதால், நாட்டின் வடக்குப் பகுதிகளை தெற்குப் பகுதியுடன் இணைக்கும் முக்கிய ரயில் இணைப்பான காசிபேட்-பல்ஹர்ஷா பிரிவில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. இரு திசைகளிலும் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது.
இரும்புச் சுருள்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 11 வேகன்கள் தடம் புரண்டன. இதில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றவும், தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யவும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
"பாதிக்கப்பட்ட ரயில்வே தடங்களை மீட்டெடுப்பதற்கும், ரயில் சேவைகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கும் நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை. விரைவில் தண்டவாளத்தை சீரமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று தென் மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் அளித்த தகவல்களின்படி, நான்கு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன, 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டன. இரண்டு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. மொத்தம் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.