புதுடெல்லி: மகாராஷ்டிரா தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், என்சிபி கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பிரச்சாரத்தின் போது பயன்படுத்தக் கூடாது என அஜித் பவார் தலைமையிலான என்சிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு சரத்பவார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர், அஜித் பவார் தரப்பு தனது பிம்பத்தை உயர்த்துவதற்காக சரத் பவாரின் வீடியோக்களை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை அப்பட்டமாக மீறுவதாகவும், அஜித் பவார் அணி, சரத் பவாரின் நற்பெயரை "பிக்கிபேக்" செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார். குற்றச்சாட்டுகளை எதிர்த்து, அஜித் பவார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங் வாதிட்டார்.
நீதிபதி சூர்யகாந்த் பல்பீர் சிங்கிடம், “இது பழைய வீடியோவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்களுக்கும் சரத் பவாருக்கும் கருத்தியல் வேறுபாடு உள்ளது, அவருக்கு எதிராக போட்டியிடுகிறீர்கள். சொந்தக் காலில் நில்லுங்கள்” என்றார். இதுபோன்ற வீடியோக்கள் பயன்பாட்டில் இல்லை என்று பல்பீர் சிங் வலியுறுத்தினார். ஆனால் அஜித் பவாருக்கும் சரத் பவாருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு தவறான படத்தை அஜித் பவாரின் முகாம் உருவாக்குகிறது என்று சிங்வி வாதிட்டார்.
என்சிபியின் இருதரப்பும் எத்தனை இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகின்றன என்று அமர்வு கேட்டதற்கு, 36 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடுகிறோம் என்று சிங்வி பதிலளித்தார்.
நீதிபதி சூர்யகாந்த், “போர்க்களத்தில் கவனம் செலுத்துங்கள். மக்கள் புத்திசாலிகள்; சரத் பவார் யார், அஜித் பவார் யார் என்பது அவர்களுக்குத் தெரியும். வீடியோ கிளிப்புகள் அவர்களை பாதிக்கலாம் அல்லது பாதிக்காமல் போகலாம், ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு மதிக்கப்பட வேண்டும்.
‘கடிகாரம்’ சின்னத்தைப் பயன்படுத்தும்போது அஜித் பவார் குழு மறுப்புச் செய்தியைச் சேர்க்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பின்பற்றவேண்டும். சரத் பவாரின் புகைப்படங்களை, பேச்சுக்களை எந்த வடிவத்திலும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்
இந்த வழக்கு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக நவம்பர் 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.