பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு? - சித்தராமையாவை விமர்சிக்கும் பாஜக


பெங்களூரு: பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

முதலமைச்சர் சித்தராமையாவின் அரசியல் செயலாளரும், எம்எல்சியுமான நசீர் அகமது பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது. அகமது சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியதையடுத்து, பொதுப்பணித்துறை டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு குறித்த வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக பெரும் சலசலப்புகளையும் உருவாக்கியது.

ஆனால் இதற்கு விளக்கமளித்த முதல்வர் சித்தராமையா, “முஸ்லீம் இடஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசு இதில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பாஜக மதவாத அரசியல் மட்டுமே செய்கிறது. அவர்கள் சமூகத்தில் நல்லிணக்கத்தை விரும்பவில்லை, அதை சீர்குலைக்க விரும்புகிறார்கள்” என்றார்

முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் குழு, ரூ.1 கோடி வரையிலான குடிமராமத்து பணிகளில் முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் மனு அளித்ததாக செய்திகள் வெளியாகின.

இதனை விமர்சித்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ‘கட்சியின் திருப்திப்படுத்தும் அரசியல் அனைத்து எல்லைகளையும் தாண்டி வருகிறது. வக்ஃப் நில அபகரிப்புக்கு மறைமுக ஆதரவிற்குப் பிறகு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கர்நாடக அரசு இப்போது அரசாங்க டெண்டர்களில் 4% முஸ்லிம் ஒதுக்கீட்டைத் திட்டமிடுகிறது. இப்படியே போனால் கர்நாடகம் விரைவில் இஸ்லாமிய குடியரசாக மாறும். மேலும் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவார்கள்”என்று தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தும் ஒரு சுருக்கமான அறிக்கையை கர்நாடக முதல்வர் அலுவலகம் வெளியிட்டது, ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை இருப்பது உண்மைதான். ஆனால் அரசிடம் இதுபற்றி எந்த முன்மொழிவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துணை முதல்வர் டிகே சிவக்குமார், பாஜகவின் குற்றச்சாட்டுகள் பொய் என்று கூறியதுடன், “இது குறித்து எந்த விவாதமும் இல்லை. தேர்தல் நேரம் என்பதால் பாஜக இதையெல்லாம் உருவாக்குகிறது” என்றார்

x