புதுடெல்லி: ‘புல்டோசர்’ வழக்கில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு, வீடியோ பதிவு போன்ற வழிகாட்டுதல்கள் இதில் அடங்கும்.
புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு இன்று தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான காரணத்திற்காக ஒருவரது குடியிருப்புகளை இடித்து தள்ளுவது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘ உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் ஒருவரின் வீடு அல்லது கட்டுமானத்தை அரசு நிர்வாகம் இடிப்பது என்பது அநீதி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும். மேலும் அவ்வாறு தவறாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளே அக்குற்றத்துக்கான பொறுப்பும் ஆவர். கட்டிடங்களை இடிக்கும் விவகாரத்தில் நீதித்துறையின் அதிகாரத்தை நிர்வாகங்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது.
வீடு என்பது வெறும் ஒரு சொத்து அல்ல. வீடு என்பது ஒரு குடும்பத்துக்கு கண்ணியத்தை அளிக்கிறது. ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட காரணத்துக்காக அவரது வீடு அல்லது கட்டிடம் இடிக்கப்பட்டால், அது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்குமான ஒரு கூட்டுத் தண்டனையாகவே உள்ளது” என தீர்ப்பு வழங்கினர்.
தன்னிச்சையாக கட்டிடங்களை இடிப்பதை கடுமையாக எதிர்த்த உச்ச நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு வழக்குகளில் இடிப்பு நடவடிக்கைகளை நிர்வகிக்க இந்தியா முழுவதும் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இருப்பினும், பொது சாலைகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பு , ரயில் பாதை, நடைபாதை அல்லது நீர்நிலைகளில் இருக்கும் கட்டிடங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவுபடி இடிக்கப்பட்டால் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இடிப்புகளுக்கான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்:
அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை மட்டுமே இடிக்கப்படும். உரிமையாளருக்கு முன்னறிவிப்பின்றி இடிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது. மேலும் இடிப்பு அறிவிப்பானது அனைவருக்கும் தெரியும்படி காட்டப்பட வேண்டும்.
ஷோகாஸ் நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டும். அது இடிப்புக்கான காரணத்தையும், விசாரணையின் தேதியையும் குறிப்பிட வேண்டும். அறிவிப்பின் விவரங்கள் மற்றும் அறிவிப்பானது பொதுவில் காட்டப்பட்ட தேதியை வழங்க மூன்று மாதங்களுக்குள் டிஜிட்டல் போர்டல் உருவாக்கப்பட வேண்டும்.
இடிப்பதற்கான தீவிர நடவடிக்கை ஏன் அவசியம் என்பதை அந்த உத்தரவு விளக்க வேண்டும். அங்கீகாரமற்ற கட்டுமானத்தை உரிமையாளர்/ஆக்கிரமிப்பாளர் அகற்ற அனுமதிக்கும் வகையில், அறிவிப்பு செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு இந்த உத்தரவு செயல்படுத்தப்படாது.
தனிப்பட்ட விசாரணைக்கான தேதி கொடுக்கப்பட வேண்டும். விசாரணையில் உரிமையாளரின் சமர்ப்பிப்புகளை பதிவு செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியானவுடன் தானாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் கலெக்டர்/மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு விரிவான ஸ்பாட் ரிப்போர்ட் தயார் செய்து, போலீஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இடிப்பு பற்றிய விரிவான வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்பாட் ரிப்போர்ட் டிஜிட்டல் போர்ட்டலில் காட்டப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை மீறுவது அவமதிப்பு அல்லது பிற சட்ட நடவடிக்கைகளில் வழக்குத் தொடர வழிவகுக்கும். இந்த வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பாவார்கள்.