ஊழல் செய்வதில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கில்லாடி கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள சிமூர் பகுதியில் பாஜக சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி ஆட்சி வந்த பிறகு வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை மாநில அரசு செய்து தருகிறது. மாநிலம், மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த மாநிலத்துக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
மகாராஷ்டிர விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் எங்கள் அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. எங்கள் தேர்தல் வாக்குறுதி மகாராஷ்டிர மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். சுதந்திரத்துக்குப் பிறகு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் அரசும் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், ஒற்றுமையைத்தான் பாஜக விரும்புகிறது. நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள். மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாடி கட்சியினர் தடையாக இருக்கின்றனர். ஊழல் செய்வதில் மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் கில்லாடிகள்.
பாஜக அரசு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள். சந்திரபூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு ரயில் வசதியே இல்லை. காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இங்கு ரயில் வசதியை செய்து தரவேயில்லை. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும்போது சந்திரப்பூருக்கு ரயில் வசதி செய்து தரப்படும்.
நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. அந்த 10 சதவீத ஆதிவாசி மக்களை சாதியால் பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ். அவர்களுக்குள்ளே சண்டையை தூண்டிவிட்டு அவர்களது ஒற்றுமையை உடைக்க நினைக்கிறது காங்கிரஸ். எனவேதான், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தியை குறிப்பிடுகிறார்) வெளிநாடுகளுக்குச் சென்று இதைத்தான் பேசி வருகிறார். நாம் ஒற்றுமையாக இருப்பதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்புவதில்லை. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. எனவே, காங்கிரஸின் சதித்திட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே, மகாராஷ்டிர மாநில மக்கள், பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்