ஊழலில் 'இரட்டை பிஎச்டி' வாங்கியது காங்கிரஸ்: மகாராஷ்டிரா பேரணியில் பிரதமர் மோடி சாடல்


சிமூர், மகாராஷ்டிரா: காங்கிரஸ் மற்றும் அதன் மகா விகாஸ் அகாதி பங்காளிகள் ஊழலில் "இரட்டை பிஎச்டி" பட்டம் பெற்றவர்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பாஜக மற்றும் மகாயுதி கூட்டணி வேட்பாளர்களுக்காக சிமூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ நாட்டின் வளர்ச்சிப் பணிகளை முடக்குவதிலும், தாமதப்படுத்துவதிலும், திசை திருப்புவதிலும் காங்கிரஸார் இரட்டை முனைவர்( பிஎச்டி) பட்டம் பெற்றுள்ளனர். 2.5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் மெட்ரோ முதல் வத்வான் துறைமுகம், சம்ருத்தி மகாமார்க் வரையிலான அனைத்து வளர்ச்சித் திட்டத்தையும் நிறுத்தினர். அகாதி என்றால் ஊழலில் மிகப்பெரிய பங்குதாரர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாட்டைப் பின்னுக்குத் தள்ளவும், பலவீனப்படுத்தவும் காங்கிரஸும் அதன் கூட்டணியும் எந்த வாய்ப்பையும் தவறவிடாது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை இன்றே காட்டியுள்ளீர்கள். மஹாயுதி இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறது என்று இந்தப் பெரும் கூட்டம் கூறுகிறது. மகாயுதியுடன், மத்தியில் உள்ள என்டிஏ அரசாங்கம், மகாராஷ்டிராவில் இரட்டை இயந்திர ஆட்சி அமைக்கும். அதாவது வளர்ச்சியின் இரட்டை வேகம். மகாராஷ்டிரா மக்கள் கடந்த 2.5 ஆண்டுகளில் இந்த இரட்டை வேக வளர்ச்சியைக் கண்டுள்ளனர்” என்றனர்

மேலும், “இன்று மகாராஷ்டிரா நாட்டிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது. இங்கு அதிகபட்சமாக வெளிநாட்டு முதலீடுகள் நடைபெறுகின்றன. புதிய விமான நிலையங்கள் மற்றும் புதிய விரைவுச் சாலைகள் இன்று மகாராஷ்டிராவில் சுமார் ஒரு டஜன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உங்களுக்கு ரத்தம் தோய்ந்த வாழ்வை மட்டுமே அளித்துள்ளன. நக்சலிசத்தை (மாவோயிசத்தை) கட்டுப்படுத்தியது எங்கள் அரசுதான். இன்று இந்தப் பகுதி முழுவதும் சுதந்திரமாக சுவாசிக்க முடிகிறது. இப்போது சிமூர் மற்றும் கட்சிரோலி பகுதிகளில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் நக்சலிசம் மீண்டும் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க, காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் இங்கு நுழையக்கூட நீங்கள் அனுமதிக்கக் கூடாது” என்றார்.

x