தெலங்கானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே ‘விசித்திரமான காதல் கதை’ - கேடிஆர் விமர்சனம்


புதுடெல்லி: நாடு முழுவதும் காங்கிரஸும் பாஜகவும் ஒன்றுக்கொன்று எதிராக சண்டையிடுகின்றன, ஆனால் தெலங்கானாவில் இரு கட்சிகளுக்கிடையே "விசித்திரமான காதல் கதை" உள்ளது என்று தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கேடி ராமாராவ் தெரிவித்தார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கே சந்திரசேகர் ராவின் மகனான கேடிஆர், டெல்லியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டரை சந்தித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மாநிலத்தில் அம்ருத் திட்டத்தை அமல்படுத்தியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டினார்.

அம்ருத் திட்டமானது நீர் வழங்கல் துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இந்த நிலையில், ரேவந்த் ரெட்டியின் மைத்துனர் சுஜன் ரெட்டியுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு ஆதாயம் அளிக்கும் வகையில், அம்ருத் டெண்டர்களில் ஊழலுக்கு காங்கிரஸ் அரசு உதவுவதாக கேடிஆர் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டுகளில் சுஜன் ரெட்டியின் சோதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சொற்ப லாபத்தையே பதிவு செய்ததாகவும், இவ்வளவு பெரிய திட்டங்களை கையாளும் தகுதி அதற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இது, டெண்டர் நடைமுறை குறித்த கேள்விகளை எழுப்புகிறது என்றார்.

இது தொடர்பாக பேசிய கேடிஆர், “ இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இந்த நிறுவனத்திற்கு தேவையான தகுதிகள் இல்லை. இது க்ரோனி கேபிடலிசத்திற்கு மிகப்பெரிய உதாரணம். பாஜகவும் காங்கிரஸும் நாடு முழுவதும் ஒன்றையொன்று எதிர்த்துப் போராடுகின்றன. ஆனால் தெலங்கானாவில் இரு கட்சிகளிடையே விசித்திரமான காதல் கதையை பார்க்கிறேன். இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக அமைதியாக அமர்ந்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டசபையில் காங்கிரஸ் 76 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், பிஆர்எஸ் 28 எம்எல்ஏக்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக 8 இடங்களைக் பெற்றுள்ளது.

x