சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த சதி நடக்கிறது: ஒற்றுமையை காக்க பிரதமர் மோடி அழைப்பு


புதுடெல்லி: குஜராத் மாநிலம் கெதா மாவட்டத்தில் உள்ள வத்டல் பகுதியில் ஸ்ரீ சுவாமி நாராயண் கோயில் உள்ளது. இக்கோயிலின் 200-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் ஜாதி, மதம், மொழிகளை வைத்து மக்களுக்குள் பிளவை ஏற்படுத்த சதி நடக்கிறது. உயர்வு - தாழ்வு, ஆண் - பெண், கிராமம் - நகரம் என்றெல்லாம் கூறி சுயநலத்துக்காக சில சக்திகள் நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்த விவகாரத்தை நாம் மிக முக்கியமானதாக கருத வேண்டும். அந்த சக்திகளின் உள்நோக்கங்களை மக்கள் புரிந்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இந்த தேசத்தின் எதிரிகள் யார் என்பதை நாம் புரிந்து கொண்டு ஒன்றுபட்டு அந்த சக்திகளை தோல்வியடைய செய்ய வேண்டும். சமூக ஒற்றுமை இந்த நேரத்தில் மிக அவசியமாக உள்ளது. திறன்மிகுந்த இளைஞர்கள் நமது பலமாக மாற வேண்டும்.

எனவே, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக ஐ.டி. துறைகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். இந்திய இளைஞர்களின் திறமை உலகளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. உலகளவில் இந்திய இளைஞர்களின் தேவை அதிகரிக்கும்.

இந்த மனித குலம் ஒரு காரணத்துக்காக உள்ளது என்பதை நமது ஞானிகள் கூறியிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டால் அது அனைத்தையும் மாற்றும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் ஞானிகள், யோகிகள் பலர் மனித குலத்துக்கு உதவி செய்துள்ளனர்.

அதன்படி, இந்த சுவாமி நாராயண் கோயில் விழா நமது கலாச்சாரம், மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் சின்னமாக திகழ்கிறது. சுவாமி நாராயணின் நினைவாக ரூ.200 மதிப்பு கொண்ட வெள்ளி நாணயம் மற்றும் தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு குறிப்பாக சுற்றுச்சூழல் தொடர்பான பல திட்டங்களுக்கு சுவாமி நாராயண் சமூகத்தினர் அளப்பரிய பங்களிப்பை அளித்து வருவது பெருமையாக இருக்கிறது.

சமீபத்தில் கூட எனது அழைப்பை ஏற்று சுவாமி நாராயண் சமூகத்தினர் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டனர். பிரயாக்ராஜில் (உ.பி.) கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் சுவாமி நாராயண் சமூகத்தினர் பங்கேற்று நமது கலாச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன். உலகம்முழுவதும் உள்ள மக்களுக்கு குறிப்பாக இந்தியர் அல்லாதவர்களுக்கு கும்ப மேளா என்றால் என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

x