பாஜகவின் முன்னோர்கள் ஆங்கிலேயருக்கு காதல் கடிதங்கள் எழுதினார்கள்: ஒவைசி விமர்சனம்


சத்ரபதி சம்பாஜிநகர்: மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் வாக்கு ஜிகாத் கருத்துக்கு பதிலளித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாஜகவின் சித்தாந்த முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக அவர்களுக்கு "காதல் கடிதங்கள்" எழுதினார்கள் என விமர்சித்துள்ளார்

சட்டசபை தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிராவில் "வாக்கு ஜிஹாத்" தொடங்கிவிட்டது. இது "தர்ம யுத்தம்" வாக்குகள் மூலம் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை கூறினார்.

இந்த சூழலில், ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்களான இம்தியாஸ் ஜலீல் (அவுரங்காபாத் கிழக்கு) மற்றும் நாசர் சித்திக் (அவுரங்காபாத் மத்திய தொகுதி) ஆகியோருக்கு ஆதரவாக சத்ரபதி சம்பாஜிநகரின் ஜின்சி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஓவைசி, "எங்கள் முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்தார்கள், பட்னாவிஸ் இப்போது ஜிஹாத் பற்றி நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து என்னை விவாதத்தில் தோற்கடிக்க முடியாது. நாங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடும் முறையைக் கொடுத்தோம். மாலேகான் தொகுதி மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு தோற்றதால், பட்னாவிஸ் 'ஓட்டு ஜிஹாத்' என்று கூறுகிறார். அப்படியானால் அயோத்தியில் எப்படி அவர்கள் தோற்றார்கள்?

தர்மயுத்தம்-ஜிஹாத்" கருத்துக்கள் தேர்தல் விதிமுறை மீறலுக்கு சமம். ஜனநாயகத்தில் 'ஓட்டு ஜிகாத்தும் தர்மயுத்தமும்' எங்கிருந்து வந்தது?. நீங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினீர்கள்; நாங்கள் உங்களைத் திருடன் என்று சொல்ல வேண்டுமா?.

எங்கள் முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்தார்கள். ஆனால், உங்களுடைய சித்தாந்த முன்னோர்கள் பிரிட்டிஷாருக்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தனர். மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்காமல் இவர்கள் துரோகம் செய்தனர். மகாராஷ்டிராவின் பல தொழில்துறை திட்டங்கள் குஜராத்திற்கு சென்றன. ஆனால் பட்னாவிஸுக்கு அவற்றை நிறுத்த தைரியம் இல்லை. அவர் நரேந்திர மோடிக்கு பயந்தாரா?” என்றார்

x