பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: மகாராஷ்டிர பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி


மும்பை: மகாராஷ்டிர பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். அதில், பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ.2,100 ஆக உயர்த்தப்படும், ஏஐ தொழில்நுட்பத்தின் கேந்திரமாக மகாராஷ்டிர மாநிலம் மாற்றப்படும் என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளனர்.

வரும் 20-ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் சிவசேனா (ஏக்நாத் அணி), பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) ஆகியவை ‘மகாயுதி’ கூட்டணியாகவும் சிவசேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ‘மகா விகாஸ் அகாடி’என்ற பெயரிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மும்பையில் நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு தற்போது அளிக்கப்படும்மாத உதவித் தொகை ரூ.1,500-ல்இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முக்கிய கேந்திரமாக மகாராஷ்டிர மாநிலம் மாற்றப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சிக்குவந்தால் உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம். விவசாயிகளின்வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். அவர்களின் கடன் சுமைகளை தீர்ப்போம். முதியோர் உதவித் தொகை ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும்.

மாநிலத்தில் 25 லட்சம் புதியவேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன் 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித் தொகைவழங்கப்படும். சுமார் 45 ஆயிரம் கிராமங்களுக்கு புதிய சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்தி, மின் கட்டணத்தை 30 சதவீதம் குறைப்போம்.

பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் ‘விஷன் மகாராஷ்டிரா 2028’ என்ற திட்டத்தை வெளியிடுவோம். அதன்படி மகாராஷ்டிராவை ஒருடிரில்லியன் டாலர் பொருளாதாரம்கொண்ட மாநிலமாக மேம்படுத்துவோம். மாநிலத்தில் 50 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது

x