ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் சோதனை: 7 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தினர்


ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவாவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராஞ்சி, ஜாம்சட்பூர் ஆகிய நகரங்களில் உள்ள 7 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை குறித்து ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் கூறுகையில், “பாஜக தொண்டர்கள் இந்தப் பகுதியில் முளைத்திருக்கிறார்கள் என்பதையே இந்தச் சோதனை காட்டுகிறது. இதை உரிய வழி யில் எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

தேர்தல் சூழலில் நடவடிக்கை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும்13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரியஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. எதிர் தரப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி களமிறங்கிஉள்ளது.

இந்தச் சூழலில், முதல்வரின் உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நோக்கம்: இந்த சோதனை குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், “தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுவதற்கு பின்னால் என்ன நோக்கம் உள்ளது? ஜார்க்கண்டில் பாஜகவின் வெறுப்பு அரசியல் எடுபடவில்லை. இதனால், அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகிய அமைப்புகளைக் கொண்டு மிரட்டும் செயலில் பாஜக இறங்கியுள்ளது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்கள் கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. எங்கள் கூட்டணியை எதிர்க்க வேறு வழி தெரியாமல் பாஜக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது” என்று தெரிவித்தார்.

நிலம் மற்றும் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த ஜூன் மாதம் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x