பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் முதல் மோடி குறித்த ட்ரூடோ பேச்சு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் - 26 பேர் பலி: பலுசிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து சனிக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. குவெட்டா ரயில் நிலையத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் காத்திருந்தனர். அப்போது பெஷாவர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் ராணுவ வீரர்கள் ஏற முயன்றனர். அவர்களை குறிவைத்து கூட்டத்தில் இருந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார்.

இதில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 46 ராணுவ வீரர்கள் உட்பட 62 பேர் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு, இந்தத் தற்கொலைப் படை தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விருதுநகர் பட்டாசு ஆலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள மதன் பட்டாசு தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வருக்கு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் ஆவேசப் பேச்சு: “விஜய் அரசியலுக்கு வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். விசிக மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள்... இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது. விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி, கூட்டணி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை; இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்” என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

“தமிழ் பல்கலை.க்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்”: மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது ஆண்டு சதய விழா சனிக்கிழமை காலை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கியது. அதில் பேசும்போது, “தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.

“ராகுல் காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது” - அமித் ஷா: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாலமு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ராகுல் காந்திக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும், அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள்” என தெரிவித்தார்.

தமிழகத்தில் நவ.15 வரை கனமழை வாய்ப்பு: அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 15-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 - ஜார்க்கண்ட்டில் ராகுல் வாக்குறுதி: ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்போது பெண்களுக்கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: செகந்திராபாத் - ஷாலிமார் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கரக்பூர் பிரிவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 3 ​​பெட்டிகள் தடம் புரண்டதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பிரதமர் மோடி குறித்து ட்ரூடோ பேச்சு: கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல என்றும், அதேபோல், கனடாவில் உள்ள அனைத்து இந்துக்களும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அல்ல என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது, “கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல், கனடாவில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் கனடாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” விவரித்தார்.

x